விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார்; செப். 4ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி.! தேசிய காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் பேராசிரியர் ராஜீவ் கவுடா இன்று சென்னை வந்தார். சத்தியமூர்த்திபவனுக்கு வந்த அவரை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், ராஜீவ் கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். வாக்குகளைப் பெறுவதற்காக உறுதியளித்துவிட்டு, பின்னர் மக்களின் முதுகில் பிரதமர் குத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலை குறைந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கான பலன் நுகர்வோருக்கு கிடைக்கவிடாமல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை மோடி அரசு உயர்த்திக் கொண்டே போகிறது. இதற்கும் மேலாக பொதுத்துறையை மூடிவிட்டு தனியார்மயமாக்கும் நடவடிகையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பெரும் மதிப்புள்ள சொத்துகளை தங்கள் கூட்டாளிகளிடம் கொடுத்து வருகிறார்கள். 20 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட 42 சதவிகித இளைஞர்கள் இன்னும் வேலையின்றி உள்ளனர். பியூன் உள்ளிட்ட குறைவான பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் பிஹெச்டி மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு துணையாக இந்திய தேசிய காங்கிரஸ் நிற்கிறது. நாடாளுமன்றத்திலிருந்து தெரு வரை, மோடி அரசின் திறமையின்மைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளோம். 2021 ஜூன் முதல் தேசிய அளவில் 7 போராட்டங்களையும், வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5ம் தேதி விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. வரும் செப்டம்பர் 4ம் தேதி ‘விலைவாசி உயர்வைப் பேசுவோம்’ என்ற பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். மக்கள் விரோத மற்றும் இளைஞர் விரோதப் போக்கிலிருந்து மோடி அரசை மாற்றும் வகையில் நிர்ப்பந்திக்கும் நமது முயற்சிக்கு, அனைத்துத் தரப்பு மக்களும் நம்முடன் கைகோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: