சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல திட்டத்திற்கு எதிர்ப்பு: ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

நீலகிரி: ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியிருக்கிறது. கடந்த 2019 ம் ஆண்டு நாடு முழுவதும் புலிகள் காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் எல்லைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 3 ம் தேதி உச்சநீதிமன்றம் சூழல் உணர்திறன் மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்து மாநில அரசுகள் கேள்வி எழுப்பியதுடன் மாநில அரசுகளின் நிலைபாடுகளை உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அந்த மாநில முதன்மை வனஉயிரின பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைக்கு வந்தால் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கூடலூர், நிலக்கோட்டை,ஸ்ரீ மதுரை, ஊராட்சி மன்றங்களில் இருக்கக்கூடிய  ஆயிரக்கணக்கான மக்களின் நிலை கடுமையாக பாதிக்கப்படும்.

பின்பு அங்கு விவசாயம் , நிரந்தர கட்டுமானம் செய்யவோ மற்றும் வணிகம் சார்ந்த தொழில்கள் செய்யவொ முடியாத என்ற காரணத்தினால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூடலூர் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு இந்த திட்டத்திற்கு எடுத்துள்ள நிலைபாடு குறித்து மக்களுக்கு எந்தவித தெளிவும் கூறப்படாத நிலையில் தான் தற்போது ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்திடம் சூழல் உணர்திறன் குறித்து வலியுறுத்த வேண்டும் என்று  இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியிருக்கிறது. இந்த போராட்டத்தில் கூடலூர், தேவர்சோலை, நிலக்கோட்டை, ஸ்ரீ மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களும் கூடலூர் சட்டமன்றத்திற்குட்பட்ட மற்ற பகுதி மக்களும் தங்களது கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருன்றனர்.

தற்போது 10,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அவர்களுக்கு ஆதரவாக சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை இயக்கமால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் கூடலூர் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றது.

Related Stories: