மதுரையில் களைகட்டிய நாட்டு இன நாய்கள் கண்காட்சி; 270 நாய்கள் பங்கேற்று அசத்தல்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த நாய்கள் கண்காட்சியில், 270 நாட்டு இன நாய்கள் அணிவகுத்து அசத்தி, பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய அளவிலான நாட்டு இன நாய்கள் கண்காட்சி மற்றும் நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நாய்கள் கண்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். மதுரை, நெல்லை, தேனி, திருச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டு இன வகையான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் இன 270 நாய்கள் பங்கேற்றன. குட்டி, நடுத்தரம் மற்றும் பெரிய நாய்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப் பட்டன.

இப்போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. நாய்கள் கண்காட்சியை தொடர்ந்து நாய்கள் வளர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் கலந்துகொண்டு பேசும்போது, ``நாட்டு இன நாய்களின் வளர்ப்பு செலவைவிட, வெளிநாட்டு நாய்களுக்கான வளர்ப்பு செலவு அதிகம். பாதுகாப்பு விஷயத்தில் நாட்டு இன நாய்களே சிறந்தது. மோப்ப சக்தி அதிகம் உள்ள நாட்டு இன நாய்களை, மத்திய மாநில அரசுத் துறைகளிலும் பாதுகாப்பு துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அதற்கான சோதனையும் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பிரதமர் முதல் முதல்வர் வரை உள்ள பாதுகாப்பு பிரிவில் நாட்டு இன நாய்கள் இடம்பெறும்’’ என்றார்.

நாட்டு இன நாய்களின் உரிமையாளர்கள் கண்ணன், ராஜூ ஆகியோர் கூறும்போது, ``ஜல்லிக்கட்டு காளைகளை போல நாட்டு இன நாய்களை வளர்க்கிறோம். இதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நாய்களுக்கு என தனியாக உணவோ, மருத்துவ சிகிச்சையோ தேவையில்லை. நம் வீட்டில் நாம் உணணும் உணவையே அதுவும் உண்டு வாழ்கிறது. பாதுகாப்பிலும் சரி, ஆற்றல், அறிவு, நன்றி உணர்வு போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறது. இதுபோன்ற கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதன் மூலம் எங்களைப் போன்ற நாட்டு இன நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நாட்டு இன நாய்களின் இனமும் பெருகும்’’ என்றனர். கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: