தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக மறுசீரமைப்பு பணியை துவங்கவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எம்பி, எம்எல்ஏக்கள் மனு

சென்னை: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியை போர்க்கால அடிப்படையில் துவங்கவேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்ளிட்ட  பலர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை  கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேதகு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்  சூசை, திருவனந்தபுரம் மறைமாவட்ட பாதிரியார் பெபின்சன், கோட்டாறு மறைமாவட்ட பாதிரியார் டனிஸ்டன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ்  தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், பாதிரியார்கள் கிளீட்டஸ்,  அம்புரோஸ் ஆகியோர் சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனுவில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் துவங்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர்,₹253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமான பணி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு விரைவில் துவங்கப்படும் என உறுதியளித்தார்.  இதுபோல் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம், தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுக்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது.

அடிக்கடி மணல் திட்டுக்களை அகற்ற ஏதுவாக மணல் அள்ளும் இயந்திரம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல்வர், மணல் அள்ளும் இயந்திரம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடலரிப்பிலிருந்து   பாதுகாக்க தொடர் தூண்டில் வளைவு அமைக்க ₹30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர்  தெரிவித்துள்ளார். மேலும் ஐஆர்இஎல், நிறுவனம் மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: