தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இன்று முடிவு: சோனியா, ராகுல், பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி தொட ர்ந்து 2வது முறையாக கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராக வர வேண்டுமென சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில், ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதென முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சி பொறுப்பிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில், காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக கட்சியின் உயர்மட்ட காரிய கமிட்டி கூட்டம் இன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டம் நடத்தப்படும். மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, அவருக்கு உதவியாக சென்றுள்ள ராகுல், பிரியங்கா ஆகியோரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ராகுல் பங்கேற்கிறார். இதன் காரணமாக, தலைவர் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ராகுலை கட்டாயப்படுத்துவோம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘காங்கிரசுக்கு தலைமை தாங்குபவர், நாடு முழுவதும் அறியப்பட்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கட்சியில் இப்போது இல்லை. ராகுல் காந்தி ஒருவரே இருக்கிறார். கட்சி தலைமையை ஏற்கும்படி அவரை கட்டாயப்படுத்துவோம். சோனியா காந்தியை மூத்த தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால்தான், அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார்,’ என தெரிவித்தார்.

Related Stories: