அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது; உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும்: ஃபிபா அறிவிப்பு

சூரிச்: இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஃபிபா தெரிவித்துள்ளது.

பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை உச்சநீதிமன்றம் நீக்கியது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம் புதிதாக தேர்தலை நடத்து ஏதுவாக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த கமிட்டியே இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ அமைப்பாக செயல்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த கமிட்டி தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் நபர் தலையீடு இருப்பதாக கூறி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா நீக்கியது. மேலும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கான உரிமத்தையும் பிபா தற்காலிகமாக ரத்து செய்தது.

இது விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க அமைக்கப்பட்ட குழுவை உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே நிர்வாகத்தை ஒப்படைத்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 2-ம் தேதி கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் அறிவித்தார்.

உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாக குழு கலைக்கப்பட்டதையடுத்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை ஃபிபா நீக்கியது. இதன் மூலம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 11 முதல் 30-ம் தேதி வரை மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் இந்தியா நடத்த உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து கூட்டமைப்பு எடுத்து வருகிறது.

Related Stories: