திருத்தணி ஒன்றியத்தில் மக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

திருத்தணி: கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 832 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்சரத்பேகம் வரவேற்றார். இதில் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, வேளாண் திட்டம், தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம், உட்பிரிவு பட்டா, கணினி திருத்தம் பட்டா, ரேஷன் கார்டுகள், சான்றுகள் என மொத்தம் 832 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வேளாண், தோட்டக்கலை, கல்வித்துறை, சுகாதாரம், கால்நடை துறை, சமூக நலன் துறை ஆகியவை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தன. முகாமில் அனைத்துஅனைத்துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்துக் கொண்டனர். முடிவில் திருத்தணி தாசில்தார் வெண்ணிலா நன்றி கூறினார்.

Related Stories: