மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவத்தை ‘எப்படி அரசியல் பண்ணலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன்’

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் கார் மீதான செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் சுசீந்திரனிடம், ‘‘இதை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்து கொண்டிருக்கிறேன்...” என பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 13ம் தேதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தார். அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டார். அங்கிருந்த பாஜ.கட்சியினர், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசினர். அவர்களை, பணியிலிருந்த போலீசார் விரட்டியடித்து, அமைச்சரை பாதுகாப்பாக அனுப்பினர். இது தொடர்பாக பாஜவை சேர்ந்த மதுரை மாவட்ட மகளிரணி தலைவி உள்பட 10 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

30 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாஜ மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “சம்பவம் நடக்கும் இடத்துக்கு ஆயிரம் பேரை அழைத்து வர வேண்டும். எத்தனை பேர் இருக்கிறார்கள்.. அனைவரையும் வர சொல்லுங்கள். மாஸாக பண்ண வேண்டும், கிராண்டாக பண்ண வேண்டும். வேறு மாதிரி பண்ணுவோம்.

இதை வைத்து எப்படி அரசியல் பண்ணுவது என யோசித்து கொண்டிருக்கிறேன், அரசியல் பண்ணிவிடுவோம்’’ என்று அண்ணாமலை பேசுகிறார். அந்த ஆடியோவில் பேசியதாக கூறப்படும் மதுரை மாவட்ட பாஜ தலைவர் மகா சுசீந்திரன், “எனது குரல் போன்று மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. தலைவர் அண்ணாமலை வேறுவேறு இடங்களில் பேசியதை வெட்டி ஒட்டி ஒன்றாக்கி இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அவமதிக்க திட்டம் தீட்டப்பட்டதாக பரவும் இந்த ஆடியோ, பொய்யான உரையாடல் என கூறி மதுரை மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் தலைமையில் மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: