மசினக்குடி - தெப்பக்காடு சாலையில் வலம் வரும் வன விலங்குகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: மசினகுடி - தெப்பக்காடு சாலைகளில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, மாயார், தெப்பக்காடு, கார்குடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.

இதனால், சாலையோரங்களிலேயே வனவிலங்குகள் அதிகளவு வலம் வருகின்றன. குறிப்பக, மசினகுடி - தெப்பக்காடு சாலை, தெப்பக்காடு -கூடலூர் சாலையில் காட்டு யானைகள் அதிகளவு வலம் வருகின்றன. அதேபோல், புலிகளும் அடிக்கடி சுற்றுலா பயணிகள் கண்களில் படுகிறது. இது சுற்றுலா பயணிகளை ஆச்சிரியத்திற்குள்ளாக்கி வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையால் தற்போது மசினகுடி மற்றும் முதுமலை வனங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால், யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.

குறிப்பாக, மசினகுடி - தெப்பக்காடு சாலையில் அதிகளவு மான் கூட்டங்கள் காணப்படுகிறது. அதேபோல், யானைகளும் அடிக்கடி வலம் வருகின்றன. இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, வாகனங்களில் இருந்தவாறு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: