பதவி காலம் முடியும் முன்பே குஜராத், இமாச்சலத்துடன் கர்நாடகாவுக்கும் தேர்தலா? தலைமை தேர்தல் ஆணையர் வருகையால் பரபரப்பு

பெங்களூரு: பதவி காலம் முடியும் முன்பே குஜராத் சட்டப்பேரவை தேர்தலுடன் கர்நாடக மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக,  தலைமை தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இன்று முதல் மூன்று நாட்கள் பெங்களூருவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பதவி காலம் 2023ம் ஆண்டு, மே மாதம் முடிகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, பேரவை பதவி காலம் முடிவதற்கு 6 மாதங்கள் இருக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்தும் அதிகாரம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. பாஜ ஆளும் குஜராத், இமாச்சல பிரதேசங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ தீவிரம் காட்டி வருகிறது.

தென் மாநிலங்களில் தற்போது கர்நாடகாவில் மட்டுமே பாஜ ஆட்சியில் உள்ளது. ஆனால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி, மேலவை, இடைத்தேர்தல்களில் அதற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுடன் கர்நாடகாவுக்கும் தேர்தல் நடத்தினால், ஆட்சியை தக்க வைக்கலாம் என்று பாஜ கணக்கு போடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்துவது போல்,  தலைமை தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமையிலான குழு இன்று பெங்களூரு வருகிறது. 27ம் தேதி வரை இங்கு முகாமிடும் இக்குழு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் மீனா, மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. இதனால், கர்நாடகா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: