அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தில் 130 இந்திய வம்சாவளிக்கு முக்கிய பதவி; ஒபாமா, டிரம்பை விட அசத்தும் ஜோ பிடன்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, டிரம்பை காட்டிலும் தற்போதைய அதிபர் ஜோ பிடன், 130க்கும் மேற்பட்ட இந்திய வம்சாளிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த 2020ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இதுவரை தனது அரசு நிர்வாகத்தில் 130க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிகளை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். தனது தேர்தல் பிரசார காலங்களில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். முந்தைய அதிபர் டிரம்ப், அமெரிக்கா வாழ் இந்தியர்களான 80க்கும் மேற்பட்டவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார்.  

மேலும் டிரம்புக்கு முன்பு 8 ஆண்டாக அதிபராக இருந்த பராக் ஒபாமா, தனது பதவி காலத்தில் 60க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களை முக்கிய பதவிகளில் நியமித்தார். அதனால் மேற்கண்ட இரு அதிபர்களை காட்டிலும், அதிகளவில் இந்திய வம்சாவளிகளை ஜோ பிடன் நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நான்கு பேர் உட்பட பல்வேறு மாநில மற்றும் கூட்டாட்சி அளவில் 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா ஆகியோர் தலைமையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அமெரிக்க நிறுவனங்களில் தலைமை பதவிகளில் வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: