பந்தலூர் அரசு பள்ளி கேட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்-பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் : பந்தலூர் பஜார் பகுதியில் உள்ள அரசு பள்ளி கேட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான மேங்கொரேஞ்ச், அத்திக்குன்னு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் வீடுகளை இடித்தும், விவசாய பயிர்களை சேதம் செய்தும் வருகிறது.

இந்நிலையில், ஒன்றை யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அரசு மருத்துவமனை, நீதிமன்றம் வழியாக  அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குள் நுழைந்து கேட்டை உடைத்து சேதம் செய்தது. கடந்த சில நாட்களாக பந்தலூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரேஞ்சர் அய்யனார் கூறுகையில்,``ஒற்றை யானை ஒன்று பந்தலூரில் கடந்த இரண்டு நாட்களாக  இரவு நேரங்களில் நடமாடி வருகிறது. பொதுமக்கள் யானை வரும்போது வீட்டில் இருந்து வெளியே வந்து இடையூறு  செய்கின்றனர். யானையால் பொதுமக்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக இரவும், பகலும் யானையை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள், யானை வரும் போது வெளியில் வராமல் அதை வனப்பகுதிக்குள் விரட்ட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: