உடுமலை மையத்திற்கு 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு-குப்பை இல்லாத நகரமாக உருவாக்க தர்மபுரி நகராட்சி நடவடிக்கை

தர்மபுரி : தர்மபுரி நகரத்தை குப்பை இல்லாத நகரமாக உருவாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மறுசுழற்சிக்கு ஆகாத கழிவுகள் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடு, கடை, வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் தெருக்களில் தினசரி 22 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் குப்பைகள் 4 இடங்களில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. நகராட்சி சந்தைபேட்டை, பச்சியம்மன் மயானம், மதிகோன்பாளையம் பாதாளா சாக்கடை திட்ட நீரேற்றும் நிலையம் அருகே, குமாரசாமிபேட்டை அரிச்சந்திரன் கோயில் மயானம் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இக்குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில், மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்றாக சேகரித்து ஹைட்ராலிக் இயந்திரங்கள் மூலம் பண்டல் கட்டப்பட்டு உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

மக்கும் குப்பைகளில் மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வைத்தால் ஒன்றும் பயன் அளிப்பதில்லை. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனால் உடுமலைப்பேட்டையில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு டீசலுக்கு மாற்று எரிபொருளாக பயன்படுத்த பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பி வைப்பதன் மூலம் தர்மபுரி நகரத்தை சுகாதாரமாகவும், தூய்மையான நகரமாகவும் மாற்றப்படுகிறது. நேற்று 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்பட்டது. தர்மபுரி நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றிச்செல்லும் லாரிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:  தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தினசரி வீடுகளிலிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மக்காத குப்பைகளில் மறுசுழற்சிக்கு ஆகாத பிளாஸ்டிக் கழிவுகள் ஹைட்ராலிக் இயந்திரங்கள் மூலம் பண்டல் கட்டப்பட்டு உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்திற்கு லாரி மூலம் அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் இதுவரை 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நகராட்சியை குப்பை இல்லாத நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக மக்கும் மாற்று பொருட்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்று சூழல் பாதுகாக்கப்படும். கடைகளுக்கு மஞ்சள் பைகளை கொண்டு செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.  இவ்வாறு கூறினர்.

Related Stories: