கல்வி தகுதி தேவையில்லை துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி: யுஜிசி புதிய திட்டம்

புதுடெல்லி: முறையான கல்வி தகுதிகள் இல்லாவிட்டாலும், துறையில் சாதனை படைத்த நிபுணர்களை பேராசிரியர்களாக நியமிக்கும் திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்த உள்ளது. பல்கலைகழக மானிய குழுவின்(யுஜிசி) கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில், பல்கலைகழகங்கள், உயர்நிலை கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்ஜினியரிங், அறிவியல், மீடியா, இலக்கியம், கலை, சமூக அறிவியல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது என்று  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனுபவத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள் என்ற முறையில் இவர்களை நியமனம் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முறையான கல்வி தகுதி இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட துறையில் 15 வருடம் அனுபவம் உள்ளவர்கள், சாதனை படைத்தவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.  மொத்த பணியிடத்தில் 10 சதவீதம் வரை மட்டுமே இந்த திட்டத்தில் கீழ் சிறப்பு பேராசிரியர்களை  நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை இவர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்படும். பேராசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் அளிக்கப்படும். கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் பரஸ்பரம் ஏற்று கொள்ளும் வகையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பை யுஜிசி அடுத்த மாதம் வெளியிடும் என்று தெரிகிறது.

Related Stories: