‘புதிய புரட்சி, வருமான வாய்ப்பு’ என விளம்பரம் ரூ.1,500 செலுத்தினால் 3 மாதத்தில் ரூ.35 ஆயிரம் தருவதாக கூறி வசூல்: காஞ்சிபுரம் மின்வாரிய அதிகாரி உட்பட 10 பேர் சிக்கினர்

குடியாத்தம்: ‘புதிய புரட்சி, வருமான வாய்ப்பு’ என விளம்பரம் செய்து ரூ.1,500 செலுத்தினால் 3 மாதத்தில் ரூ.35 ஆயிரம் தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்த காஞ்சிபுரம் மின்வாரிய அதிகாரி உட்பட 10 பேர் குடியாத்தத்தில் சிக்கினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த கும்பல், ரூ.1,500 செலுத்தினால் 3 மாதத்தில் ரூ.35 ஆயிரம் கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சித்த மருத்துவ முகாம் நடத்துவதற்காக திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. ஆனால் ‘ஒரு புதிய  புரட்சி, புதிய சவால், வருமான  வாய்ப்பு விழா’ என்ற தலைப்பில் பேனர்கள் வைக்கப்பட்டு, கோட் சூட் அணிந்திருந்த 10 பேர் கும்பல் பொதுமக்களிடம் மோசடியாக பணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்திய போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம்,  பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜோதி உட்பட 10 பேர் சேர்ந்து, பொதுமக்கள் கட்டும் தொகையில் சர்வதேச நாடுகளின் தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு வகையான காயின் வாங்குவதாகவும், ரூ.1500க்கு காயின் வாங்கினால் 3 மாதத்திற்குள் ரூ.35 ஆயிரம்  தருவதாகவும் கூறி நம்ப வைத்துள்ளனர். இதை நம்பி குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பணம் செலுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, மண்டபத்திலிருந்த பொதுமக்களிடம் இதுபோன்று ஏமாற வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பினர். மேலும் ஜோதி உள்ளிட்ட 10 பேரின் விவரங்களை சேகரித்துக்கொண்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: