இன்று ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் சிறப்பு ஏற்பாடு

நாகர்கோவில்:  ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான  இன்று பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என்பதால், நாகராஜா கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் வருவது உண்டு. குறிப்பாக ஆவணி ஞாயிறு நாகராஜர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி இன்று (21ம்தேதி) ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

இதையொட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நாகராஜ கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெயிலில் பக்தர்கள் நிற்பதை தவிர்க்க தற்காலிக கியூ ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மேலும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அதிகளவில் நாகருக்கு மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள் என்பதால், அந்த பால் வெளியேற அந்த பகுதியில் உள்ள ஓடை சீரமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் அறநிலையத்துறை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட இருக்கிறது. ஒரு லிட்டர் பால் பாயாசத்துடன் (சில்வர் பாத்திரத்துடன்) தேங்காய் பழம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாத பையின் மதிப்பு ரூ.400 ஆகும்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

கோயில் உட்பிரகாரம், நாகராஜர் சன்னதி, அனந்தகிருஷ்ணர் சன்னதி, துர்க்கையம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி பகுதிகள் உள்பட மொத்தம் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது உடமைகள் மற்றும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தெப்பக்குளம் படித்துறைகளில் உள்ள பாசிகளும் சுத்தப்பட்டுள்ளன.

Related Stories: