பள்ளிப்பட்டு பகுதியில் ராஜஸ்தான் குடும்பத்தினர் தயாரிக்கும் மாசற்ற விநாயகர் சிலைகளுக்கு மவுசு; ரூ.50 முதல் 500 ரூபாய் வரை விற்பனை

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளிப்பட்டு பகுதியில் ராஜஸ்தான் குடும்பம்  சிறிய அளவில் மாசற்ற வண்ண விநாயகர் சிலைகள் செய்து, விற்பனைக்கு  தயார் நிலையில் வைத்துள்ளனர். குறைந்த விலை என்பதால் இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று  நீர்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்திருந்தது.

தற்போது, கொரோனா குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு  சோளி ங்கர் சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த 5 ஆண்டுகளாக மாசற்ற விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியை செய்து வருகிறது. இதில், களிமண், பேப்பர் கூழ், மாவு மற்றும் மூலப்பொருட்கள் வைத்து சிலைகள்கள் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் பெரிய உருவங்களில்  விநாயகர் சிலைகள் வைத்து  3 முதல் 7 நாட்கள் கொண்டாடப்படும். அதே நேரத்தில், அனைத்து வீடுகளிலும் சிறிய  விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.  எனவே,  பள்ளிப்பட்டு பகுதியில்  வசித்து வரும், ராஜஸ்தான் குடும்பத்தினர் கடந்த மூன்று மாதங்களாக மாசற்ற முறையில்  எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய மாவு, பேப்பர்கூழ், வாட்டர் பெயின்ட் கொண்டு அரை அடி முதல் இரண்டு அடி வரை  பல்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்து  விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ரூ.50 முதல் ரூ.500 வரை  விற்கப்படுகிறது.  

இயற்கையாகவும், பார்க்க அழகாகவும் இருப்பதோடு, தண்ணீரில்  கரையக்கூடியதாக இருப்பதால், பெரும்பாலானோர் இந்த விநாயகர் சிலைகள் வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, ராஜஸ்தானை சேர்ந்த பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்  கூறுகையில், ‘‘பேப்பர் கூழ், மாவு மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு, வாட்டர் பெயின்ட்  வண்ணம் தீட்டப்படுவதால், பார்க்க  அழகாகவும், எளிதில் தண்ணீரில் கரையக்கூடியதாக உள்ளது.  பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக, இந்த சிலைகளை வாங்க பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  விலையும் குறைவாக  இருக்கிறது. வியாபாரிகளும் மொத்தமாக வாங்கிச் சென்று கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு விநாயகர் சிலைகளுக்கு  நல்ல வரவேற்பு உள்ளது,’’என்றார்.

Related Stories: