ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி உறியடி திருவிழா கோலாகலம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  கோகுலாஷ்டமியை முன்னிட்டு, வழுக்கு மரம் ஏறும் உற்சவம், உறியடி திருவிழா  நேற்று நடைபெற்றது. கோயிலுக்கு எதிரே உள்ள நாத நீராஞ்சன மேடையின் அருகே அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர கம்பத்தில் எண்ணெய் பூசப்பட்டு கம்பத்தின் மீது இருந்த பரிசு பொருட்களை எடுக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், உள்ளூர் இளைஞர்கள், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழுக்கு மரம் ஏறி பரிசு பொருட்களை எடுத்தனர்.

இதேபோல் உறியடி உற்சவத்தில் சேற்றில் நின்றபடி, இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி பரிசு பொருட்களை எடுத்தனர். இதை காண  மலையப்ப சுவாமியும், ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனி   ஊர்வலமாக  பெரிய ஜீயர் மடம், ஹாதிராம்ஜி மடம், கர்நாடக சத்திரம் ஆகிய இடங்களில் சுற்றி வலம் வந்தார்.

இதில், ஏழுமலையான் கோயில் ஜீயர்கள், துணை செயல் அதிகாரி ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல், திருப்பதியில் உள்ள தாமரை கோயில் (இஸ்கான் கிருஷ்ணர்) கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விநாயக நகரில் உள்ள மைதானத்தில் உறியடி உற்சவம் நடைபெற்றது.

Related Stories: