வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது ஒன்டே; 50 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்றிரவு நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 212 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. மார்ட்டின் கப்தில் 3, டெவோன் கான்வே 6, கேப்டன் லதாம் 0, மைக்கேல் பிரேஸ்வெல் 6, க்ளென் பிலிப்ஸ் 9, ஜேம்ஸ் நிஷம் ஒரு ரன்னில் அவுட் ஆகினர். அதிகபட்சமாக ஃபின் ஆலன் 96, டேரில் மிட்செல் 41, மிட்செல் சான்ட்னர் 26 ரன் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் கெவின் சின்க்ளேர் 4, ஜேசன்ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 213 ரன் இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர் டக்அவுட் ஆக, ஷாய் ஹோப் 16, கேப்டன் பூரன் 2, பிராண்டன் கிங் 2, கீசி கார்டி 16 ரன்னில் ஆட்டம் இழக்க 63 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து வெ.இண்டீஸ் தடுமாறிய நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 41 ஓவராக குறைக்கப்பட்டது. ஆனால் ஒரு ரன் மட்டுமே குறைக்கப்பட்டு 212 ரன் இலக்குடன் வெ.இண்டீஸ் தொடர்ந்து பேட் செய்தது.

8வது விக்கெட்டிற்கு அல்சரி ஜோசப்-யானிக் கரியா அதிரடியில் மிரட்டினர். 31 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 49 ரன் எடுத்து அல்சரி ஜோசப் அவுட் ஆனார். யானிக் கரியா 52 ரன்னில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். 35.3 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 161 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து 1-1 என சமன் செய்தது. பவுலிங்கில் சவுத்தி 4, போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினர். ஃபின் ஆலன் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

Related Stories: