ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சென்னை போலீஸ்காரர் பலி

சேலம்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஈட்டியம்பட்டி கிராமத்ைத சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வேலு (34), முதல்நிலை காவலர். இவர், சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வருகிறார். தனது மனைவி பார்வதி மற்றும் 3 மகன்களுடன் கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் வசித்தார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் போலீஸ்காரர் வேலுவிற்கு மஞ்சள்காமாலை நோய் வந்துள்ளது. இதனால், மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு, சொந்த ஊரான தர்மபுரி அரூருக்கு வந்துள்ளார். பின்னர் வேலு, வேலூர் மாவட்டம் வாலாஜாவில் மஞ்சள்காமாலைக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

அங்கு சிகிச்சைக்கு சென்ற அவர் நேற்று காலை, வாலாஜா ஸ்டேஷனில் இருந்து மொரப்பூருக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்தார். காலை 10.10 மணிக்கு மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஓடும் ரயிலில் இருந்து வேகமாக போலீஸ்காரர் வேலு இறங்கியுள்ளார். அப்போது திடீரென கால் தவறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்துவிட்டார்.

அதில், ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் வேலு உயிரிழந்தார்.இறந்த போலீஸ்காரர் வேலுவின் உடலை போலீசார் கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேதப்பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த வேலுவிற்கு மனைவி மற்றும் 7, 6, 2 வயதில் 3 மகன்கள் உள்ளனர்.

Related Stories: