அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியா? வைத்திலிங்கமா?

சென்னை: அதிமுகவில் ஜூன் 23ம் தேதி நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பின்படி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாகத்தான் கருத முடியும். ஆனால், தேர்தல் ஆணையத்தில் சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தாக்கல் செய்த மனுவில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டார். இதனால், அவர் பொதுக்குழு எடுத்த முடிவின்படி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார். தற்போது பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்பதாகிவிட்டது.

அதேநேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்து விட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்துள்ளார். இதனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியா, வைத்திலிங்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் மொத்தத்தில் அதிமுகவில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. இந்தக் குழப்பத்தை இருவரும் சேர்ந்து தீர்க்கப் போகிறார்களா அல்லது மீண்டும் புது குழப்பத்தை உருவாக்கப் போகிறார்களா, மீண்டும் நீதிமன்றத்தை நாடப்போகிறார்களா என்பது அவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகள் தான் தீர்மானிக்கும் என்கின்றனர் அதிமுகவின் அப்பாவித் தொண்டர்கள்.

Related Stories: