ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா; மாநில அரசியலுக்கு தள்ளியதால் அதிருப்தி

காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், தான் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகினார். பிரசாரக் குழு தலைவர் பதவி மட்டுமின்றி, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார். முதல்கட்ட தகவலின்படி, இந்த நியமனம் தனது மதிப்பிற்கு குறைவானதாக கருதியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது.  இதையடுத்து, அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவரை, தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலில் இறக்கியதால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்களில் ஒருவராக குலாம்நபி ஆசாத் இருந்து வருகிறார். இவரது அதிருப்தியை வெளிப்படையாகவும் பல முறை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: