இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு..!!

பெங்களூரு: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது என்று  கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் சிவமோஹா நகரில் இருக்கும் அமீர் அகமது பகுதியில் சுதந்திர தினத்தன்று இந்து அமைப்புகள் சவார்க்கர் பேனர்களை வைத்தனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், திப்பு சுல்தான் பேனர்களை வைக்க முயன்றனர். இதனால் வெடித்த மோதல் கலவரமாக மாறி இந்து அமைப்பைச் சேர்ந்த பிரேம் சிங் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரேம் சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த நாடு மொத்தமும் இந்துஸ்தான், இங்கு இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது என்றார். ஈஸ்வரப்பா அமைச்சராக இருந்த போது நாட்டின் தேசிய கொடி ஒருநாள் காவிக்கொடியாக மாறும் என்று சர்ச்சையாக பேசியவர். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை அவர் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இதனிடையே சிவமோஹாப் முழுவதுமாக பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்திருக்கிறார்கள்.

Related Stories: