திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கோயிலில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு; 4 பேர் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயிலில் திருடப்பட்ட 5 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோக சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களில் இருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன.

இதுகுறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தமிழக கோயில்களிலிருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சிலைகளை மீட்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதிநாத பெருமாள் ரங்கநாயகி அம்மாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.12 கோடி மதிப்பிலான 5 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர். வடமதுரை ஆதிநாதப் பெருமாள் கோயிலில் 2021ல் நுழைந்து கத்தி முனையில் 5 வெண்கல சிலைகள் திருடப்பட்டது.

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 சிலைகளை அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலைகளை வாங்கும் இடைத்தரகர்களை போல மாறுவேடத்தில் சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடுகின்றனர்.

Related Stories: