கள்ளச்சந்தையில் விற்க வைத்திருந்த 1,000 மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 பேர் கைது

புதுக்கோட்டை: கள்ளச்சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த 1,000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் கைது செய்தனர். சுதந்திர தின விழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை சிலர் வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதாகவும், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு விடிய, விடிய போலீசார் சோதனை நடத்தினர். இதில் அன்னவாசல் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன்(20), இளங்கோவன்(42), ராமச்சந்திரன்(32), மாறன்(60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 559 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆலங்குடி அண்ணா நகரில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அந்த காரை பின்தொடர்ந்து போலீசார் காரில் விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள், சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து அந்த காரை திறந்து சோதனை செய்தபோது 429 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: