கவியருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்-அத்துமீறி வனத்தில் நடமாட்டமா? வனத்துறை தீவிர கண்காணிப்பு

ஆனைமலை : சுதந்திரதினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையில் கவியருவிக்கு,  சுற்றுலா பயணிகள் 12 ஆயிரம் பேர் வந்தனர் எனவும், அத்துமீறி வனப்பகுதியில் நடமாடுகின்றனரா? என கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பருவ மழையால், ஆழியார் அருகே உள்ள கவியருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது. இதனால், தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

இதில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை சுதந்திர தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.நேற்று, வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், கவியருவி பகுதி முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பலர், வெகுநேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில்,  ஆனந்த குளியல் போட்டனர். நேற்று சுதந்திர தினம் என்பதாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர். கவியருவிக்கு கடந்த 3 நாளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனத்திற்குள் சென்றுள்ளார்களா? என்று வன ஊழியர்கள் காண்காணித்தனர். இதுபோல, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் தினமும்  பயணிகள் கூட்டம் இருக்கும். முக்கிய பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். கடந்த 3 நாட்களாக  விடுமுறை நாள் என்பதால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆழியாறில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆழியார் அணை, பூங்கா ஆகியவற்றை ஆர்வத்துடன் சுற்றி பார்த்து ரசித்தனர். கார் மற்றும் பைக்குகளில் நண்பர்களுடன் வந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆழியாறு அணையில் கூட்டம் அதிகளவில் இருந்ததால், முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: