சீன உளவு கப்பலுக்கு பதிலடி, இலங்கைக்கு டோர்னியர் விமானம் தந்தது இந்தியா; கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்த நடவடிக்கை

கொழும்பு: சீன உளவு கப்பல் இலங்கைக்கு வர இருப்பதற்கு முன்பாக, இந்தியா தனது கடல்சார் கண்காணிப்பு விமானமான டோர்னியர் விமானத்தை இலங்கைக்கு பரிசாக தந்துள்ளது. இந்திய கடற்படையின் துணை தளபதி எஸ்என். கோர்மதே 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

அங்கு இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, அந்நாட்டின் பாதுகாப்பு துறையை வலுப்படுத்த கடல்சார் பாதுகாப்பை கண்காணிக்கும் டோர்னியர் போர் விமானத்தை வழங்கினார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் அருகே நடந்த இந்நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்றார்.

இது குறித்து இந்திய தூதரக அதிகாரி கோபால் பாக்லே கூறுகையில்,‘‘இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்பு பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பு அடிப்படையில் மேம்பட்டு வருகிறது. இதற்கு இந்த டோர்னியர் 228 ரக விமானம் பரிசளிக்கப்பட்டதே சான்றாகும்,’’என்று தெரிவித்தார். இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான டோர்னியர் விமானங்களை இயக்குவது, கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு இந்திய ராணுவம் ஏற்கனவே 4 மாதங்கள் பயிற்சி அளித்துள்ளது.

தற்போது இந்த டோர்னியர் விமானம், இலங்கை விமானப் படையை சேர்ந்த 15 வீரர்கள் குழுவின் கண்காணிப்பு, பராமரிப்பில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்து வரும் 2 டோர்னியர் விமானங்கள் இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டதும், தற்போது வழங்கப்பட்ட டோர்னியர் விமானம் இந்திய கடற்படைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: