அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து வரலாற்றின் குரலாக நினைத்து நின்றுவிட்டது சரோஜ் நாராயணசுவாமி குரல் எனவும் மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டது அறிந்து வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மும்பையில் காலமானார். தமிழ்நாட்டு மக்களின் செவிகள் கடந்த சில ஆண்டுகளில் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற என்ற கம்பீர குரலை கேட்காமல் விடிந்ததில்லை.

தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட சரோஜ் நாராயணசுவாமி அகில இந்திய வானொலியின் முதல் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றவர். டெல்லியில் 1965-ம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் சேர்ந்த அவர் 35 ஆண்டுகள் வானொலி ஒலிபரப்பில் பங்காற்றினார்.  

இவரது கம்பீர குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் ஏராளமான நேயர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றார். சுமார் 35 ஆண்டுகள் டெல்லியில் பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமி கடந்த 1995-ம் ஆண்டில் ஒய்வு பெற்றார்.

பின்னர் மும்பையில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டது அறிந்து வேதனையடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Stories: