வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தையில் பாதிரியார் மரிய ஆரோக்கியம், தனக்கு சொந்தமான வீட்டு கட்டிடத்தில் கிறிஸ்தவ மத வழிபாடு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியுள்ளார். இதற்கு அப்பகுதியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், வீட்டில் மத வழிபாடு நடத்த கலெக்டர் தடை விதித்தார். இதை எதிர்த்து பாதிரியார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் வீட்டை மத வழிபாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 80 சதவீதத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், எஸ்பியின் பரிந்துரையின்பேரில், கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். விதிப்படி, குடியிருக்கும் வீட்டை வழிபாட்டு கூடமாக செயல்படுத்த அனுமதி இல்லை. இதற்கு கலெக்டரிடம் தான் அனுமதி பெற வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுத்திடவே கலெக்டர் தடை விதித்துள்ளார். அருகிலேயே 2 சர்ச்கள் உள்ளன. இந்து கோயிலும் உள்ளது. சட்டம், ஒழுங்கை பராமரித்து அமைதியை பாதுகாப்பது கலெக்டரின் கடமை. எனவே, கலெக்டரின் உத்தரவு சரியானது தான். அதில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

Related Stories: