எருதுகட்டு விழாவுக்கு அனுமதி கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மதுரை ராமநாதபுரம் மாவட்டம், ஆவாரேந்தல் அருகே பரனூரைச் சேர்ந்த பாலமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள மகா சாத்தையா கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழாவுக்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். அரசு சிறப்பு பிளீடர் மகாராஜன் ஆஜராகி, ‘‘இதே மனுதாரர் தாக்கல் செய்த மனு மே மாதத்திற்கு பிறகு அனுமதிக்க முடியாது என்பதால் ஏற்கனவே தள்ளுபடியானது. நிராகரித்த கலெக்டரின் உத்தரவை எதிர்த்த மனுவும் தள்ளுபடியானது. அதே கோரிக்கைக்கு மீண்டும் மனு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மனு விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திடும் வகையிலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: