உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா

டொரன்டோ: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி விரைவில் தொடங்க உள்ள நிலையில் பிரேசில் வீராங்கனை ஹடாத் மியா,  உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியுள்ளார். கனடா நாட்டின்  டொரன்டோ நகரில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின்  இகா ஸ்வியாடெக்(21வயது) காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றில் பிரேசில் வீராங்கனை  பீட்ரிஸ் ஹடாத் மியா(26வயது, 24வது ரேங்க்) உடன் மோதினர். தனது சர்வீஸ்களில்  அதிரடி காட்டிய மியா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அடுத்த செட்டில் சுதாரித்த ஸ்வியாடெக்  6-3 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி தந்தார்.

 

அதனால் 3வது செட்டில்  இருவரும் மல்லுக்கட்ட சுமார் ஒரு மணி நேரம் நீண்ட அந்த செட்டை  மியா 7-5 என்ற கணக்கில் தனதாக்கினார். அதனால் 3 மணி நேரம் நீண்ட ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்திய மியா காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டு மட்டும்   கத்தார் ஓபன், இண்டியன்வெல்ஸ் ஓபன்,  மயாமி ஓபன், ஸடூட்கர்ட் ஓபன், ரோம் ஓபன்,  பிரஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம்  என 6 பட்டங்களை  வென்றார்.

ஆனால் அதன் பிறகு விம்பிள்டன் ஓபன், சொந்த  ஊரில் நடந்த போலாந்து ஓபன் என அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஸ்வியாடெக்,  இப்போது டொரன்டோ ஓபனிலும் தோல்வியை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் இந்த ஆண்டு உலக தர வரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளை 3வது முறையாக மியா வீழ்த்தியுள்ளார். அவர் இந்த ஆண்டு பிர்மிங்காம் ஓபன்,  நாட்டிங்காம் ஓபன்  2 சர்வதேச பட்டங்களையும் வென்றுள்ளார்.

Related Stories: