ஆசிய கோப்பை டி20 அணி வங்கதேசம் இன்று அறிவிப்பு: தீர்ந்தது ஷாகிப் பிரச்னை

டாக்கா: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வங்க தேச அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஆசிய  நாடுகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி  இம்மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான்  நாடுகளை தவிர வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகள் தங்கள் அணிகளை இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில் வங்கதேசம் தனது அணியையும்,  கேப்டனையும் நேற்று முன்தினம் அறிவிப்பதாக இருந்தது. ஆனால் அறிவிக்கவில்லை. அதற்கு காரணம்  ‘முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து  இன்னும் குணமாகவில்லை’ என்று கூறப்படுகிறது.

ஆனால் முன்னணி வீரரான ஷாகிப் அல் ஹசன் , ‘பெட் வின்னர்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த பிரச்னைதான் முக்கிய காரணம் என்ற  விவரம் வெளியாகி உள்ளது. ‘அந்த நிறுவனத்தின் ‘ஒப்பந்தத்தை’  முழுமையாக தவிர்த்தால் மட்டுமே அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும்’ என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உறுதிப்பட  தெரிவித்துள்ளனர்.

அதனை ஷாகிப்பும் ஏற்றுக் கொண்டதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ‘சனிக்கிழமை(இன்று) மதியம், ஆசிய கோப்பையில் விளையாட உள்ள அணி வீரர்கள், கேப்டன் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் ’என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் செயல்தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: