வருமானத்துக்கு அதிகமாக 315% சொத்துக்குவிப்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: நாமக்கல், மதுரை, திருப்பூரில் 26 இடங்களில் விஜிலென்ஸ் அதிரடி

நாமக்கல்: வருமானத்துக்கு 315 சதவீதம் அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் நகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக ஆதாரத்துடன் புகார்கள் எழுந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், புதுக்கோட்டை டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான சேலம் இளங்கோவன் ஆகியோரது வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது.

அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், விடுதிகள், வணிகவளாகங்கள் என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பப்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் நாமக்கல் நகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி.பாஸ்கர் வீடு மற்றும் அவர் தொடர்புடையை 26 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் நாமக்கல்லில் 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.

நாமக்கல் நகர அதிமுக செயலாளராக இருப்பவர் பாஸ்கர்(54). இவர், கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3ம் முறையாக பாஸ்கர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுக நகர செயலாளராக கடந்த 20 ஆண்டுக்கு மேலாக பாஸ்கர் இருந்து வருகிறார். எம்எல்ஏவாக பாஸ்கர் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பெயரிலும், மனைவி உமா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் சேர்த்ததாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 6.30 மணியளவில் நாமக்கல் -மோகனுார் சாலை அசோக்நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் வீட்டுக்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார் வந்தனர். அப்போது, பாஸ்கர் வீட்டில் இருந்தார்.

இதையடுத்து, போலீசார் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், பாஸ்கரின் தீவிர ஆதரவாளர்களான அசோக்நகரில் குடியிருந்து வரும் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஓட்டல் உரிமையாளர் லோகேஸ், பாஸ்கரின் அக்கா கலா, நல்லிபாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் விஜய், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கோபி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. ராமாவரம்புதூரில் உள்ள பாஸ்கருக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் அலுவலகம், சந்தைப்பேட்டைபுதூரில் உள்ள தொழிலதிபர் மோகன், இன்ஜினியர் கமலநாதன், கொசவம்பட்டி தொழிலதிபர் சுரேஷ், நாச்சி ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்தி மற்றும் பாஸ்கரின் உறவினர் வீடுகள் என மொத்தம் 24 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 5 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 40 போலீசார் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 24 இடங்களிலும் போலீசார் ரெய்டு நடத்தியதால் நாமக்கல் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஸ்கர், அவரது மனைவி உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கக்கூடிய 24 இடங்களில் நாமக்கல்லில் சோதனை நடைபெறுகிறது. மேலும், திருப்பூர் மற்றும் மதுரையில் உள்ள பாஸ்கரின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது,’’ என்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த அதிமுகவினர், பாஸ்கர் வீட்டின் முன்பு குவிந்தனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர் ஆகியோரும் பாஸ்கர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் பாஸ்கர் வீட்டின் அருகில் அமர்ந்திருந்தனர். முன்னாள் எம்எல்ஏ வீடு அமைந்துள்ள அசோக்நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

* சிக்கிய முதல் மாஜி எம்எல்ஏ

நாமக்கல் நகர அதிமுக செயலாளராக பாஸ்கர், தொடர்ந்து 20ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார்.இவரது தந்தை பரமசிவம் நாமக்கல் நகரமன்ற தலைவராக இருந்தவர். முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணியின் தீவிர ஆதரவாளர் பாஸ்கர். இதனால் தான் தொடர்ந்து நடந்த 3சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஸ்கருக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியாக தன்னை எப்போதும் காட்டிக்கொள்பவர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது நடந்த பிரசாரத்தில், ‘இலைக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்லசாவே வராது’ என்று இவர் பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இதேபோல் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த விவகாரத்தில் ரெய்டில் சிக்கிய முதல் அதிமுக மாஜி எம்எல்ஏ இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* திருப்பூரிலும் சோதனை

திருப்பூர்: வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தொடர்பாக நாமக்கல் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கரன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 26 இடங்களில் நேற்று ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். திருப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஹரிபாபு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று திடீரென சோதனை செய்தனர். லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தட்சிணா மூர்த்தி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

* மதுரை ஆர்ஆர் கட்டுமான நிறுவனம்

மதுரை: நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் நிறுவன அலுவலகம் மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும் நல்ல தொடர்பில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன், முறைகேடு தொடர்பான ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி, அதன்பேரிலும் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: