ஏக்கனாம்பேட்டை பெரிய தெருவில் கழிவுநீர் கால்வாயை அதிகாரிகள் ஆய்வு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் ஏக்கனாம்பேட்டை ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், வங்கிகள், நூலகம், இ சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், இந்த ஊராட்சியின் பெரிய தெரு பகுதியில் மழை நீர் வடிகால்வாய் உள்ளன. இந்த மழை நீர் வடிகால் வாய் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும் மழை நீர் இந்த கால்வாய் வழியாகத்தான் வேகவதி ஆற்றை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 தற்போது, இந்த மழை நீர் வடிகால்வாய் கடந்த வருடம் சீரமைக்கப்பட்டன. சீரமைக்கப்பட்ட பெரிய தெரு பகுதியில் முறையாக இந்த வடிகால்வாயை இணைக்கவில்லை இதனால், மழை நீர் பல மாதங்களாக தேங்கி நின்ற நிலையில் இதில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் காற்றில் பறந்து வந்து கால்வாயில் விழுந்த நிலையில் தற்போது இவை கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று பரவும் அபாய நிலையில் உள்ளதாக தினகரன் நாளிதழில் நேற்று (11.8.2022) படத்துடன் செய்தி வெளியானது. இதனை அடுத்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) வேதபுரி மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெரிய தெரு பகுதியில் உள்ள கால்வாயை ஆய்வு மேற்கொண்டனர்.  இதனை அடுத்து கால்வாயில் உள்ள கழிவுநீரை அகற்றும் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்த கால்வாய் பணி முழுமை அடையும் வகையில் இங்கு தரைப்பாலம் அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டன. நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் உடனடியாக இப்பகுதியை ஆய்வு மேற்கொண்ட அரசு அலுவலர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Related Stories: