பாதியில் நிற்கும் நடை மேம்பால பணி: அவதிப்படும் மக்கள்: தீர்வு எப்போது?

திருப்பூர்: திருப்பூரில் கிடப்பில் கிடக்கும் நடைமேம்பால பணியால் அவதிப்படும் மக்கள் தீர்வு எப்போது கிடைக்கும் என காத்திருக்கின்றனர். திருப்பூர் நகரில் குறுகிய ரோடுகளில் அபரிமிதமான வாகன போக்குவரத்து பெருக்கத்தால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை நாளுக்குநாள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாநகரில் உள்ள பிரதான சாலைகளின் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க பெண்கள், வயதானவர்கள், மாணவ-மாணவியர் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு என எந்த ஒரு சந்திப்பிலும் வெள்ளை கோடுகள் (ஜீப்ரா லைன்) போடப்படவில்லை. இதனால், நெரிசலில் சிக்கும் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகள் செல்வதற்கு என சாலையின் இருபுறமும் தனியாக நடைபாதையும் கிடையாது. இதனால் பொதுமக்கள், சாலையோரம் வாகனம் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள வெள்ளை கோட்டை தாண்டி நடக்கும் நிலை நிலவுகிறது.

இந்நிலையில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரோடுகளில் அவர்கள் எளிதாக சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் நிலையம்-தலைமை தபால் நிலைய சந்திப்பு பகுதியில் ஒரு நடை மேம்பாலமும், டவுன்ஹால் அருகே, பார்க் ரோடு, நல்லூர் ஆகிய இடங்களில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு அவை தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையம், டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் ரயில் நிலையம், பார்க் ரோடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களில் மட்டும் பணி முழுமை பெற்றுள்ளது. ஆனால், புஷ்பா ரவுண்டானா பகுதியில் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும் பாலம் அமைக்கப்பட்டு பணி பாதியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பாலம் அந்தரத்தில் நிற்கிறது. தற்போது, பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இங்கு ரயில் நிலையம் அருகில் இருப்பதால் இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகம் இருக்கும். இந்த சாலையை மாணவ, மாணவியர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இங்கு எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக வந்து சென்றவண்ணம் இருக்கும். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் சாலையை கடப்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு பாலம் அந்தரத்தில் இருப்பதால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் அமைப்பு பணியை மீண்டும் தொடங்கி விரைவில் பாலத்ைத கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல், மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைத்தும் பாலத்தின் பணிகள் முழுமையடைவதற்கு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். மாநகரின் பிற பகுதிகளிலும் அதிக வாகன போக்குவரத்து உள்ள இடங்களை ஆய்வு செய்து அங்கும் நடைமேம்பாலங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு. இது குறித்து முன்னாள் கவுன்சிலர் நடராஜ் கூறுகையில்,``திருப்பூர் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதனால், பெரும்பாலான ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இனியும் தாமதிக்காமல் பாலம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி கட்டி முடிக்க வேண்டும்’’ என்றார். இது குறித்து யோகா ஆசிரியை காயத்ரி கூறுகையில்,`` திருப்பூர் மாநகரில், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரோடுகளில் அவர்கள் எளிதாக சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், புஷ்பா ரவுண்டானா பகுதியில் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும் பாலம் அமைத்து பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.  

இதன்காரணமாக, பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ரயில் நிலையம், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி ஆகியவை அருகில் இருப்பதால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.சாலையை கடக்கும்போது மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பாலம் பணியை விரைந்து முடித்து, உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார். அந்தரத்தில் தொங்கும் நடைபால மேம்பால பணியை அதிகாரிகள் எப்போது முடித்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு தருவார்கள் என மக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories: