அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. மேலும் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் விதிகளை பின்பற்றி பொதுக்குழு நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதங்களை முன்வையுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

தற்போது, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டு வருகிறார். வாதத்தில், பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய விதி திருத்தப்பட்டுள்ளது. விதிகள் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளரை அடிப்படை  உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய இயலாது எனவும் கூறப்பட்டது.

இரு பதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிடில் இருபதவிகளும் காலியாகிவிடும். தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: