மலை கிராமத்தில் இருந்து முதல் பட்டதாரி பெண்

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள இஞ்சிக்குழி என்ற மலைகிராமம் உள்ளது. இந்த மலைவாழ் கிராமத்தை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இக்கிராமம் பாபநாசத்தில் இருந்து சுமார் 15 கி.மீ.க்கு மேல் மலைப்பகுதியில் உள்ள காரையாறு அணையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், புலி, சிறுத்தை, யானை என வனவிலங்குகள் உலா வரும் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அமைதியான அழகான கிராமம் ஆகும். இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த 7 குடும்பத்தினர் அதாவது சிறுவர்கள் உள்பட 24 பேர் மட்டுமே வசிப்பது ஆச்சரியம் அளிக்கும் கூடுதல் தகவல்.

இவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனி. இத்தகைய கடினமான சூழலை எல்லாம் தாண்டி கல்லூரி லட்சியத்தை எட்டிப்பிடித்து இருக்கும் அந்த வனக்கிராமத்து முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அபிநயா. தனது ஒரே மகளை எப்படியாவது பட்டதாரி ஆக்கிவிட வேண்டும் என்ற அவரது தந்தை அய்யப்பனின் ஆசையே அவர் இந்த நிலையை அடைய ஏணிப்படியாக இருந்திருக்கிறது. இதற்காக அபிநயா குடும்பத்தை பிரிந்து நெல்லையில் தங்கி 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். வக்கீலாக வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஆண்டு நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்து உள்ளார்.

ஆனால் இணையதள வசதி இல்லாததால் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கும் விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவரால் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது சில கல்லூரிகளில் அபிநயா விண்ணப்பித்தார். மேலும் இங்கு செல்போன் கோபுரம் இல்லாததாலும், கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரும் என்பதாலும் தனது மகளுக்காக அய்யப்பன் கடந்த மூன்று மாதங்களாக வேலையை விட்டு விட்டு இஞ்சிக்குழியில் இருந்து இடம் பெயர்ந்து காரையாறு அணை அருகே உள்ள சின்ன மைலார் காணிக்குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் செல்போன் சிக்னல் கிடைக்கும் என்பதால் தினமும் அய்யப்பன் அங்கு சென்று விடுவார். அதன் பயனாக தற்போது அபிநயாவுக்கு நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிக்க இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அபிநயா கூறும்போது, ‘எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. என்னை படிக்க வைக்க பெற்றோர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான் நன்றாக படித்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பேன்’ என்றார். அபிநயாவின் தாய் மல்லிகா கூறுகையில், ‘எங்கள் ஊரில் இருந்து பள்ளிக்கு சென்று வரமுடியாது என்பதால், சின்ன வயதில் இருந்தே எங்களது மகளை பிரிந்து வாழ்கிறோம். அவளை பார்க்க முடியாமல் பலமுறை அழுதுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Related Stories: