மூணாறு அருகே வெள்ளத்தூவல், வட்டவடை குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு-வீடுகள் சேதம்; பொதுமக்கள் அச்சம்

மூணாறு : மூணாறு அருகே வெள்ளத்தூவல், வட்டவடை பகுதியில் நிலச்சரிவு எற்பட்டதால் குடியிருப்புகள் சேதமடைந்தன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் சேதமடைந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வெள்ளத்தூவல் பஞ்சாயத்தில் உள்ள ஷெல்லியாம்பாறை பண்டாரப்படி என்னும் இடத்தில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பங்கஜாக்சி போஸ்(63) என்பவருடைய வீடு முழுமையாக சேதமடைந்தது.

நள்ளிரவில் பெரிய சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதால், வீட்டில் இருந்த பங்கஜாக்சி மற்றும் அவரது மகன்களான பிபின், லிபின் ஆகியோர் வீட்டிற்குள் வந்த தண்ணீரை பார்த்து தப்பி ஓடினர். சில நிமிடங்களில் மண், பாறை கற்கள் வீட்டின் மேல் விழுந்தன. இதில், வீடு முழுவதும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பி உள்ளனர். இதேபோல, வல்லநாடு ரவியின் வீடு சேதமடைந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மண்ணில் புதைந்தன. சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், அடிமாலி - வெள்ளத்தூவல் சாலையில் கிடந்த பாறைக்கற்கள், மண்ணை அகற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் தேவிகுளம் எம்எல்ஏ அட்வகேட் ராஜா பார்வையிட்டார்.அப்போது அவர் கூறுகையில், ‘‘வெள்ளத்தூவல் பகுதியில் 12 வீடுகள் மண் சரிவு அபாயத்தில் உள்ளன. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள், வெள்ளத்தூவல் அரசு பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மூலம் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தடை விதிப்பு :

மூணாறை அடுத்த வட்டவடை ஊராட்சியிலிருந்து பழத்தோட்டம் செல்லும் சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனப்பகுதியில் 200 அடி உயரத்தில் உள்ள குன்றிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மரங்கள் மற்றும் பெரிய பாறைகள் சரிந்து வந்து சாலையில் விழுந்தன. பழத்தோட்டம் மற்றும் பழங்குடி ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மண் சரிவு தொடர்வதால், சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், நான்கு நாட்களுக்கு பழத்தோட்டம் பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

வட்டவடை ஊராட்சியில் மண் அள்ளும் இயந்திரம் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால், மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை. மேலும், மூணாறு - வட்டவடை சாலையில் குண்டலை எஸ்டேட் புதுக்கடி டிவிஷன் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சாலை சேதமடைந்துள்ளதால், வட்டவடை பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. நிலச்சரிவால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள காலதாமதமாமும் என பஞ்சாயத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வட்டவடை ஊராட்சியில் கனமழை பெய்து, பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால், இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி பீதியுடன் தவிக்கின்றனர்.

Related Stories: