மஞ்சூரில் கனமழையால் நிலச்சரிவு; தேயிலை, காய்கறி தோட்டங்கள் அடித்து செல்லப்பட்டன: வீடுகள் இடிந்தது; மரங்கள் வேரோடு சாய்ந்தன

மஞ்சூர்: மஞ்சூர்  எமரால்டு லாரன்ஸ் பகுதியில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 5 ஏக்கர் தேயிலை, காய்கறி தோட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடு, மரங்கள் சாய்ந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.  குறிப்பாக, மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் இரவு, பகலாக இடைவிடாமல் பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால், மரங்கள் விழுவதும், மண் சரிவு ஏற்படுவதும், வீடுகள் இடிந்து விழுவதுமாக உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. இந்த மழையால் மஞ்சூர் அருகே எடக்காடு தலையட்டி பகுதியில் சமுதாய கூடம் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. சமுதாய கூடத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், எடக்காடு ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், தங்காடு சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் அருகே ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போர்த்தி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டது.  எமரால்டு லாரன்ஸ் பகுதியில் சாலையோரத்தில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சாலையின் கீழ்புறம் இருந்த தேயிலை தோட்டங்கள் மண்ணோடு அடித்து செல்லப்பட்டது. சுமார் 5 ஏக்கர் பரப்பிலான தேயிலை செடிகள் மற்றும் மலைகாய்கறி பயிர்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்திருக்ககூடும் என கூறப்படுகிறது. இதேபோல் பல வீடுகள் மழையால் சேதமடைந்தது.

Related Stories: