ஏபிஆர்ஓ பணிக்கான நேரடி நியமனம் ரத்து; டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: அரசு அதிரடி உத்தரவு

சென்னை: உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) நேரடி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி இந்த பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் கல்வி தகுதியிலும் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் இன்று வெளியிட்டுள்ள அரசாணை:

செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(விளம்பரம்)(ஏபிஆர்ஓ) பணியிடங்கள் தமிழ்நாடு பொது சார்நிலை பணி தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியிடங்களாகும். அரசின் திட்டங்கள் மக்கள் அறிந்து கொள்ள செய்தல். படக்காட்சிகள் நடத்தப்படும் இடங்களில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளக்கமாக எடுத்து கூறுதல், அரசு வெளியிடும் செய்திகளை உடனுக்குடன் மக்கள் அறியும் வண்ணம் சுவரொட்டி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தல் ஆகிய முக்கிய பணிகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அவ்வப்பொழுது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம், மக்கள் தொடர்பு துறையில் 2 ஆண்டு அனுபவம். தமிழ், ஆங்கிலத்தில் கம்ப்யூட்டர், டைப்ரேட்டிங் படித்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இனி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ, பிஎஸ்சி ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா, விசுவல் கம்யூனிகேசன், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் முதுநிலை டிகிரி, டிப்ளமோ(ஜெர்னலிசம், மாஸ் கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன், அட்வர்டைசிங், மல்டி மீடியா சயின்ஸ்) படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு ஜெர்னலிசம், மீடியா சயின்ஸ் படித்திருக்க வேண்டும். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களுங்களை நிரப்புவதற்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு, பணிமாறுதல் இடையே 1:1 என்ற விகிதாசாரத்தில் (50 சதவீதம் நேரடி நியமனம்,50 சதவீதம் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்) நிரப்பப்படும்.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறை விதிகள் மற்றும் இப்பணியிடத்திற்கான தற்காலிக விதிகளில் உரிய திருத்தங்கள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகள் சிபாரிசு செய்பவர்களும் செய்தித் துறையில் நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். எதிலும் புதுமையை புகுத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ஏபிஆர்ஓ விஷயத்திலும் அதிரடியை புகுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: