சென்னை அருகே பரபரப்பு சம்பவம்; சொந்த வீட்டிலேயே 550 சவரன் திருடி காதலிக்கு போட்டு ரசித்த தொழிலதிபர்; ஸ்கூட்டி, கார் வாங்கி கொடுத்து இன்ப சுற்றுலா: இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை

சென்னை: சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை  திருடி, நகைகள், கார், மற்றும் ரூ.30 லட்சம் கொடுத்து  காதலியை ஜொலி ஜொலிக்க வைத்த தொழிலதிபர் சிக்கினார். காதலியும் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரது மகன்கள் சேகர் (40), ராஜேஷ் (37). மகள் திருமணமாகி கணவர் வீட்டில் இருக்கிறார். சேகர், பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே பேக்கரி நடத்தி வருகிறார். மேலும் பைனான்சும் செய்து வருகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சேகரின் மனைவி தன் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அவர்,  பீரோவில் விட்டு சென்ற நகைகளை தேடி பார்த்துள்ளார். ஆனால், பாதி நகைகளை காணவில்லை. சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த மொத்த நகைகளையும் சரி பார்த்துள்ளனர். தமிழ்ச்செல்வியின் நகைகள் உள்பட மொத்தம் வீட்டிலிருந்த 550 சவரன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டில் நகை வைத்திருந்த பெட்டி உடைக்கப்படவில்லை. எனவே வீட்டில் இருந்த ஒவ்வொருவரிடமும் போலீசார் துருவித்துருவி விசாரித்தனர்.  இதில் சேகர் நகையை திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:சேகருக்கு அவரது நண்பர் மூலமாக வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த ஸ்வாதி (22) என்பவர் அறிமுகமாகி உள்ளார். சேகரிடம், தான் ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருவதாக ஸ்வாதி அறிமுகம் செய்து கொண்டார்.பின்னர் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஓட்டலில் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். தனது அழகில் சேகர் மயங்கியதை உணர்ந்ததும் தனக்கு ஏதாவது நகை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். அதற்காக, ஸ்வாதிக்கு சேகர் தோடு, கம்மல், செயின், ஆரம் என கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் தனது வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து ஸ்வாதிக்கு போட்டு அழகு பார்த்து ரசித்துள்ளார். ஸ்வாதி பிறந்தநாள், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என்று முக்கிய தினங்களிலும் அவர் கேட்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து பரிசாக பணம், நகை கொடுத்துள்ளார்.

இப்படி, வீட்டிலிருந்த 550 சவரன் நகைகளையும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு ஒரு ஸ்கூட்டியும் காரும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த பெண்ணிற்காக சேகர் ரூ.30 லட்சம் வரை செலவு செய்திருப்பதும், இருவரும் சேர்ந்து வெளியூர்களுக்கும் அடிக்கடி சென்று  வந்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். ஸ்வாதிக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்வாதியின் நடத்தை பிடிக்காமல் கணவர் மகளுடன் பிரிந்து சென்றுள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: