அம்பேத்கர் நகர் வாலிபர்கள் நடத்திய 25ம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி: பெரியபாளையம் அணி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றது

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டையில் மாபெரும் கைப்பந்து போட்டி நடந்தது. இதில், முதல் இடத்தை பிடித்து பெரியபாளையம் அணி வெற்றி  பெற்றுள்ளது. ஊத்துக்கோட்டை டாக்டர் அம்பேத்கர் நகரில்,  அம்பேத்கர் நகர் வாலிபர்கள் நடத்தும் 25ம் ஆண்டு கைப்பந்து போட்டி கடந்த மாதம் 31 தேதி தொடங்கி ஒருவாரம்  நடந்தது. இதில் பெரியபாளையம்,  ஊத்துக்கோட்டை,  சென்னங்காரணி,  பாலவாக்கம் என பல்வேறு கிராமங்களை சேர்ந்த 54 அணிகள் மோதியது.  இதில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.  

கவுன்சிலர் கல்பனா பார்த்திபன் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட பிரதிநிதிகள் சம்சுதீன், சீனிவாசன், ஒன்றிய பிரதிநிதிகள்  மோகன்பாபு, சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் நகர் கைப்பந்து போட்டி நடத்தும் இளைஞர்கள் வரவேற்றனர்.  இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத்,  துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் போட்டியில் முதல் பரிசை வென்ற பெரியபாளையம் டி.என். பாய்ஸ் அணிக்கு ₹ 20 ஆயிரம் ரொக்கபணமும், கோப்பையையும் வழங்கினர்.

இரண்டாவது பரிசாக ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் வினோ பிரண்ட்ஸ் அணிக்கு ₹15 ஆயிரமும் மற்றும்  கோப்பையும், 3வது பரிசாக கும்மிடிபூண்டி வி.சி. பிரண்ட்ஸ் அணிக்கு ₹ 10 ஆயிரமும், 4வது பரிசாக  ஏ.கே.பிரண்ட்ஸ் அணிக்கு ₹ 8 ஆயிரம் கோப்பையும், 5வது பரிசாக அம்பேத்கர் நகர் பிரண்ட் அணிக்கு  ₹ 6 ஆயிரம் கோப்பையும்,  6வது பரிசாக பாலவாக்கம் சூரியா பிரண்ட்ஸ் அணிக்கு ₹4 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது.  போட்டியில் உடற்கல்வி ஆசிரியர் ரஜினி நடுவராக இருந்தார்.  இந்நிகழ்ச்சியில். கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன்,  கோல்டுமணி, சுமலதா நரேஷ்  உட்பட பலர் கலந்துகொண்டனர் .

Related Stories: