அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு.: ஆக.10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை ஆக.10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றதுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இரு வாரங்களில் வழக்கை முடிக்க வேண்டுமெனவும் ஆணையிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் வேறு நீதிபதி புதிதாக வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதனை ஏற்று, வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீசெல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் குருகிரஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் (ஆக.10) புதன்கிழமை 2.15 மணிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: