12ம் தேதி முதல் விழிப்புணர்வு வாரம்; மாணவர்களின் உடல், மன நலன் காக்க பள்ளிகளில் சிறப்பு பயிற்சி

சேலம்: தமிழக அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி முதல் விழிப்புணர்வு வாரம் கடைபிடித்து, மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன், வரும் 11ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றிற்கு பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் 11ம் தேதியன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள், பிறவிக் குறைபாடுகள், குழந்தைப் பருவ நோய்கள், தாமதமான வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றையும், அவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து சிகிச்சை வழங்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் விளக்கிக் கூறப்படும். தேசிய வளரிளம் பருவத்தினர் நலத்திட்டத்தில், ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

சமூக நலத்துறை சார்பில், சரிவிகித உணவின் முக்கியத்துவம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், உயர்கல்வி உறுதித் திட்டம், சானிடரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனைப் பாதுகாப்பாக எரியூட்டுதல், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலைத் தடுத்தல், சாலைப் பாதுகாப்பு, இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைல்டுலைன் அவசர உதவி எண் 1096, பள்ளிக் கல்வித்துறையின் மாணவர் உதவி எண் 14417 மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாரத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: