நீலகிரியில் தொடரும் கனமழை; 10 இடங்களில் மண் சரிவு: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்ததுடன் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினமும் இரவு முழுவதும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதில், மஞ்சூர் ஊட்டி சாலையில் சாம்ராஜ் எஸ்டேட் அருகே கற்பூர மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர், ஊட்டி, மற்றும் குன்னூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.  இதேபோல், மஞ்சூர் எடக்காடு முக்கிமலை பகுதியில் சாலையோர மண் திட்டு இடிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை ஜேசிபி உதவியுடன் நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். எமரால்டு, நஞ்சநாடு, கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சாலை பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மண்சரிவுகளை அகற்றினர். எடக்காடு கவுண்டம்பாளையம் பகுதியில் இரவு முழுவதும் பலத்த சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையில்2 வீடுகள் இடிந்து விழுந்தன.

Related Stories: