பரமத்திவேலூர் பகுதியில் குடியிருப்புகள், கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது-கண்காணிப்பு பணிகள் தீவிரம்

பரமத்திவேலூர் : பரமத்திவேலூர் பகுதியில் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோயில், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால், விநாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர், திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி கதவணை, ஜேடர்பாளையம் தடுப்பணை, பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் ஆகிய பகுதிகளில், இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால், அங்குள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தென்னை, வாழை, மரவள்ளி, நெல், கரும்பு மற்றும் பூந்தோட்டம், வெற்றலை கொடிக்கால் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேலும், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும், ஆற்றங்கரையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருவாய்த்துறையினர் மக்களை முன்னதாகவே வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண, ஆற்றுப்பாலத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒருசிலர் அங்கு தடையை மீறி செல்பி எடுத்துச் செல்கின்றனர். அதேவேளையில், பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதை தடுக்கும் வகையில், ஆங்காங்கே காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், உள்ளாட்சித்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தவாறு உள்ளனர்.

Related Stories: