கனமழையால் மஞ்சூர்- தங்காடு சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய பெய்த பலத்த மழையில் தங்காடு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை நீடிக்கிறது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் வருவாய், நெடுஞ்சாலை உள்பட அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக குந்தா தாலுகா அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் குந்தாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக மஞ்சுர் சுற்றுபுற பகுதிகளில் அபாயகர நிலையில் உள்ள மரங்கள் மற்றும் பள்ளிகளின் அருகே உள்ள அபாயகர மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதில் மஞ்சூர்-தங்காடு சாலையில் எடக்காடு அருகே பிகுளி பாலம் பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து எடக்காடு வழியாக தங்காடு, ஊட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு மரம் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இச்சாலையில் போக்குவரத்து சீரானது.

இதேபோல், நேற்று பகலிலும் தொடர்ந்த மழையால் கேரிங்டன் அருகே மரம் விழுந்தது. இதனால் மஞ்சூர் கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூரில் இருந்து பயணிகளுடன் சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் போக்குவரத்து தடையால் சம்பவ இடத்தில் அணிவகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில் இத்தலார் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் வசிக்கும் விஸ்தீர வனிதா என்பவரின் வீட்டின் ஒரு பகுதி மழையில் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து வருவாய்த் துறையினர் அவருக்கு அரசின் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் கூறினர்.

Related Stories: