நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட அரசு அலுவலக கட்டிடங்கள் இடிப்பு: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியிருந்த ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட அரசு அலுவலகங்கள், நூலகம், ரேஷன் கடைகள் இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே தொழுதாவூர் கிராமம் உள்ளது. இங்கு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த அருள்முருகன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ராம் கணேஷ் என்பவர் தோல்வியடைந்தார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. இதை மனதில் வைத்து, இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ராம் கணேஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அசரத் பேகம் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை 3 ஜேசிபி இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதை பார்த்ததும் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உடனடியாக வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கு செல்ேவாம்’ என்று பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.

இருப்பினும் நீதிமன்ற உத்தவை காண்பித்து இடிக்கும் பணியை தொடங்கினர். இதில், ஆக்கிரமித்து கட்டியிருந்த ஐஏஎஸ் அதிகாரியான அபூர்வா, ஊராட்சி மன்ற தலைவர் அருள்முருகன் ஆகியோரது வீடுகள் இடிக்கப்பட்டது. தவிர, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 8 பேரின் வீடுகள், கடை, அரசு அலுவலகமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி, நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையம், ரேஷன் கடை போன்றவை இடிக்கும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக எங்களது வீடுகளை இடிக்கிறீர்கள். வழக்கு தொடர்ந்த ராம் கணேஷ் மட்டும் நல்லவரா. அவர், ஏரி கால்வாயை ஆக்கிரமித்து வீட்டுமனை அமைத்து விற்று வருகிறார். அதற்கு இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? ஏழைகள் என்பதால் எங்கள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? எங்களுக்கு நியாயம் வேண்டும்’ என்றனர். இதற்கு அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேறு எதையும் நாங்கள் செய்யவில்லை’ என்றனர்.

Related Stories: