சித்தூரில் ஆலோசனை கூட்டம் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்-அதிகாரி உத்தரவு

சித்தூர் : சித்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும என்று மின் துறை அதிகாரி கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாவட்ட மின் துறை மண்டல அலுவலகத்தில் மின் துறை அதிகாரி கிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது: சித்தூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புக்காக 13 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மிக விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்.

விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மின் கம்பங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. அப்படி சேதமடைந்த மின்கம்பத்தை உடனே சரி செய்ய வேண்டும். தாழ்வாக இருக்கும் ஒயர்களை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

தொழிற்சாலை உரிமையாளர்கள் புதிய மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் பதிவு செய்தால் சான்றிதழ்களை சரி பார்த்து உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள அரசு அலுவலகங்களை கண்டறிந்து மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீதம் கட்டணம் செலுத்தினால் 30 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். சித்தூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.  கூட்டத்தில் மின்சாரத்துறை அதிகாரி ஹரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: