பெண் இன்ஸ்பெக்டரால் மிரட்டப்பட்ட போலீஸ்காரருக்கு ரூ.1 லட்சம் நிதி: கடலூர் எஸ்பி வழங்கினார்

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு கல்குவாரி செயல்பட்டு வந்தது. அங்கு பாறைகளை உடைக்க ‘ஜெலட்டின்’ குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு உத்தரவுப்படி, போலீஸ்காரர் ராஜசேகர் அங்கு சென்றார். இது குறித்து தகவலறிந்து வந்த அப்போதைய ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி ஆகியோர், போலீஸ்காரர் ராஜசேகரை மிரட்டியுள்ளனர்.

இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு தண்டபாணி ஆகியோர், போலீஸ்காரர் ராஜசேகரை மிரட்டியது உறுதியானது.

அதையடுத்து, போலீஸ்காரர் ராஜசேகருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால், அவருக்கு தமிழக அரசு, 4 வாரத்துக்குள் ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அதை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஊதியத்தில் ரூ.75 ஆயிரம், ஏட்டு தண்டபாணி ஊதியத்தில் ரூ. 25 ஆயிரம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன், உத்தரவிட்டார். அதன்படி, போலீஸ்காரர் ராஜசேகருக்கு ரூ. 1 லட்சம் நிதியை, கடலூர் மாவட்ட எஸ்பி. சக்திகணேசன் வழங்கினார்.

Related Stories: